பதிவு செய்த நாள்
16
ஆக
2019
04:08
மதுரை: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, மதுரை பூ மார்கெட் அருகே பூ மாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பெண்கள் கூட்டம் அலைமோதியது. பாரியூரில் பிரசித்தி பெற்றது கொண்டத்து காளியம்மன் கோவில். ஆடி வெள்ளியை முன்னிட்டு, காலை முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். காலை, 7 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. உடுமலை மாரியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். உடுமலை தளி ரோடு காமாட்ச்சியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். கோவை பத்திரகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியையொட்டி கனி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல், கோவை லாலி ரோடு பெரிய மாரியம்மன், கோவை ராயப்பபுரம் தண்டுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கோயில்களில் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.