பதிவு செய்த நாள்
30
மார்
2012
11:03
பண்ணாரி மாரியம்மன் நேற்று புதூர் கிராமத்தில் வீதி உலா வந்த போது, பெண்கள் வரிசையாக தரையில் படுத்து, வணங்கி, வழியனுப்பி வைத்தனர். பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது. செவ்வாய் இரவு பண்ணாரி கோவிலில் இருந்து, மாரியம்மன் சப்பரத்தில் வீதிஉலா புறப்பட்டார். நேற்று முன்தினம் சிக்கரசம்பாளையத்தில் வீதியுலா முடிந்து, இரவு புதூரில் தங்கினார். நேற்று காலை புதூரில் வீதி உலா முடிந்து வெள்ளியம்பாளையத்துக்கு புறப்பட்டார். அப்போது, புதூர் கிராம பக்தர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பண்ணாரி மாரியம்மனை, மரியாதையுடன் வழியனுப்பு வழக்கம். கிராம மக்கள் தரையில் வரிசையாக படுத்திருக்க, அவர்களைத் தாண்டி அம்மன் சப்பரம் சென்றது. நேற்று மாலை கொத்தமங்கலம் வழியாக இரவு தொட்டம்பாளையம் வேணுகோபால் ஸ்வாமி கோவிலில் அம்மன் தங்கினார். இன்று காலை தொட்டம்பாளையம் பகுதியில் வீதி உலா முடிந்து, மதியம் பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து, வெள்ளியம்பாளையம் புதூருக்கு வருகிறார். நாளை இரவு அக்கரைத் தத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் தங்குகிறார். வீதி உலா செல்லும் பண்ணாரி மாரியம்மனை வழி நெடுகிலும் பக்தர்கள் வரிசையாக நின்று தேங்காய், பழம் உடைத்து, மாலை அணிவித்து வணங்கினர்.