திருத்தணி :தீ மிதி திருவிழாவையொட்டி, திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு தீ மிதி திருவிழா, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 10 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. பகல் 1.30 மணி முதல், மாலை 5.30 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் திரு வீதியுலாவும், 10 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது. நேற்று காலை 10.30 மணிக்கு திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 8ம் தேதி தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணா ரெட்டி தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.