பதிவு செய்த நாள்
27
ஆக
2019
01:08
மதுரை : மதுரையில் பாரம்பரிய பெருமை பேசும் அறியப்படாத ஆன்மிக சுற்றுலா தலங் களில் யானைமலை ஒத்தக்கடையில் உள்ள பிள்ளை லோகாச்சார்யா கோயிலும் ஒன்று.
நம் நாட்டு வளங்களை 1323ல் கொள்ளையடிக்க அந்நியர்கள் ஸ்ரீரங்கம் கோயிலை நோக்கி படையெடுத்தனர். கோயிலை காக்க பிள்ளை லோகாச்சார்யா, வேதாந்த தேசிகர் ஆகியோர் மூலவர்கள் ரங்கநாதன், தாயார் சிலைக்கு கல் திரையிட்டனர். உற்ஸவர்கள் அழகிய மண வாளன், தாயாரை மூடு பல்லக்கில் வைத்து தெற்கு நோக்கி புறப்பட்டனர்.
மதுரை ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் வந்த போது அதற்கு மேல் செல்ல முடியாமல் மலை குகைக்குள் உற்ஸவர்களை வைத்தனர். தினமும் திருவண்டிக்காப்பு பூஜை செய்யும் முன் மலையில் ஏறி அந்நியர்கள் வருகிறார்களா என்று பார்ப்பர்.
அந்நியர்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து ’ஆஹோ... ஓஹோ’... என, குரல் எழுப்பிய பின் பூஜைகள் நடக்கும். இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த பூஜைக்கு முன் இப்படி குரல் எழுப்புகிறார்கள்.
மதுரை எழுத்தாளர் நிரஞ்சனா கூறியதாவது: லோகாச்சார்யா 120ம் வயதில் முக்தி அடைந்தார். பின் குகைக்குள் இருந்த பெருமாளை அழகர்கோவில், கோழிக்கோடு, திருக்கண்ணாம்பி, திருப்பதி, செஞ்சி கோட்டை பகுதிகளில் எடுத்துச்சென்று பாதுகாத்தனர். 48 ஆண்டுகளுக்கு பின் 1371ல் மீண்டும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சேர்த்தனர். அப்போது உண்மையான சிலைதானா என்ற சந்தேகம் வந்தது. பெருமாளின் ஆடைகளை துவைக்கும் பார்வையற்ற முதியவர் ஒருவர், சிலையின் அபிஷேக நீரை சுவைத்து பார்த்து ’இது நம் பெருமாளே’ என்றார். அன்று முதல் ரங்கநாத சுவாமி ’நம் பெருமாள்’ என பெயர் பெற்றார்.
குகையில் இருந்த பிள்ளை லோகாச்சார்யா திருவடிகளுக்கு திருமோகூர் பட்டர்கள் பூஜை செய்து வந்தனர். 2007ல் ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் முயற்சியில் அங்கு லோகாச்சார்யா சிலையுடன் கோயில் புனரமைக்கப்பட்டது. இதுபோன்று மதுரையில் உள்ள பழங்கால கோயில்களை கண்டறிந்து ஆன்மிக சுற்றுலா தலமாக்க வேண்டும், என்றார்.