பதிவு செய்த நாள்
04
செப்
2019
02:09
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, யானை வாங்க, அதிகாரிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் குழு, பெங்களூரில் முகாமிட்டுள்ளது.
கடந்த, 1995ல், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, 7 வயதுடைய, ’ருக்கு’ என்ற பெண் யானையை, அப்போதைய முதல்வர், ஜெ., வழங்கினார்.கடந்த, 23 ஆண்டுகளாக, தினந்தோறும் அதிகாலையில் நடக்கும், கோ பூஜை, கஜ பூஜையில், யானை பங்கேற்று, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியது. கடந்த ஆண்டு, மார்ச்சில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, யானை ருக்கு இறந்தது.
இதையடுத்து, கோவிலுக்கு, புதிய யானை வழங்க, வசதி படைத்தோர் பலர் முன்வந்தனர். ஆனால் கோவில் நிர்வாகம், யானை வாங்குவது தொடர்பாக, எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது.தற்போது, கோவிலுக்கு, புதிய யானை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் உடைய குழு, கர்நாடக மாநிலம், பெங்களூருக்குச் சென்று உள்ளது.
கர்நாடக வனப் பகுதியில், யானைக் குட்டிகளை பார்த்து, ஆய்வு செய்து வருகின்றனர். தேர்வு செய்யப்படும் யானைக் குட்டி, வனத்துறையின் ஒப்புதலுக்கு பின், தி.மலைக்கு அழைத்து வரப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.