நத்தம்: நத்தம், கோவில்பட்டி செண்பகவள்ளி அம்பிகா சமேத கைலாசநாதர் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்ட விழா வரும் 8ம் தேதி நடக்க உள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் புதிய தேர் கட்டுமானத்திற்காக அறநிலையத்துறை சார்பில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோயிலை சேர்ந்த கலைஞர்கள் தேர் உருவாக்கும் பணியை தொடங்கினர். இரு அச்சுகள் மற்றும் 4 சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டது. அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் நன்கொடையாளர்களிடம் நிதி திரட்டப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது தேர் முழுமையான வடிவம் பெற்றுள்ளது. இதற்காக ரூ 30 லட்சம் வரை செலவு ஆகி இருப்பதாக தகவல் உள்ளது. நாளை மாலை விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்குகிறது. புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, ரக்க்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், பூர்ணாகுதி உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது. 8ம் தேதி காலை விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம் நடக்க உள்ளது. தொடர்ந்து கடம் புறப்பாடு மற்றும் அபிஷேகம் செய்து ரத வெள்ளோட்டம் நடக்க உள்ளது. விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.