பதிவு செய்த நாள்
03
ஏப்
2012
12:04
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சி அரசியல் தலையீடு காரணமாக பெரியார் நகர், 80 அடி சாலைக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மிகவும் விமரிசையாக நடக்கிறது. இந்தாண்டு விழா மார்ச், 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆரம்பித்து, வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் அறநிலையத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் கலைநிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். கலைநிகழ்ச்சிகள், 15 ஆண்டுகளாக, மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்தான் நடந்து வந்தது. இந்தாண்டு திடீரென அரசியல் தலையீடு காரணமாக பெரியார் நகர், 80 அடி சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி பிரமுகர் வற்புறுத்தலால்தான் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறநிலையத்துறை அலுவலர்கள் கூறியதாவது: பெரிய மாரியம்மன் கோவிலுக்கு என்று சொந்தமான பெரியளவில் இடம் இல்லை. அதனால், ஒவ்வொரு ஆண்டும் செங்குந்தர் பள்ளியில் கலைநிகழ்ச்சி நடத்தி வந்தோம். அதற்கு மைதான வாடகையாக, 60 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி வந்தோம். மைதானத்தை சுத்தம் செய்வது, பள்ளி கட்டிடத்துக்கு சேதம் என்றால் சரி செய்து தருவது என்றிருந்தோம். வெள்ளிக்கிழமை நடக்கும் கலைநிகழ்ச்சிக்கு மட்டுமே அதிகளவில் மக்கள் கூட்டம் கூடுகிறது. மற்ற நாட்களில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்தாண்டு மக்கள் கூட்டம் கூடும் வகையில், பெரியார் நகர், 80 அடி சாலைக்கு கலைநிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளது. 20 ஆண்டுக்கு முன் கோவில் விழாவின் போது, 14 நாட்கள் வரை கலைநிகழ்ச்சி நடந்துள்ளது. படிப்படியாக எண்ணிக்கை குறைந்து போய், இந்தாண்டு நான்கு நாள் மட்டுமே கலைநிகழ்ச்சி நடக்கிறது. தற்போது, கலைநிகழ்ச்சி நடக்கும் பெரியார் நகர் 80 அடி சாலையில் நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் எளிதில் தங்கள் வீட்டுக்கு செல்லும் வகையில் மூன்று ரோடுகள் உள்ளன. மக்கள் நன்மை கருதியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்தாண்டு கலைநிகழ்ச்சி: இன்று இரவு, 9 மணிக்கு நகைச்சுவை நிகழ்ச்சி, நெருப்பு நடனம், கரகாட்டம், மிமிக்ரி மற்றம் பல்சுவை சிறப்பு நடனம் நடக்கிறது. நாளை இரவு, 9 மணிக்கு, "லட்சுமண்-ஸ்ருதி இன்னிசை கச்சேரி நடக்கிறது. 5ம் தேதி இரவு 9 மணிக்கு, நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. 6ம் தேதி இன்னிசை கச்சேரி நடக்கிறது.