பதிவு செய்த நாள்
03
ஏப்
2012
12:04
ஈரோடு : ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான குண்டம், தேர்த் திருவிழா, மார்ச் 20ம் தேதி இரவு 9 மணிக்கு, பூச்சாட்டுடன் துவங்கியது. 24ம் தேதி இரவு 8.30க்கு பட்டாளம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அன்றிரவு 10.30க்கு, பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது. பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று அதிகாலை நடக்கிறது. முன்னதாக, பக்தர்களின் வசதிக்காக, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ""பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களுக்கான, பங்குனி மாத குண்டம் திருவிழா இன்று நடக்கிறது. இதில், 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்குவர். கோவில் குண்டத்துக்காக, இரண்டு டன் மரக்கட்டைகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. இன்றிரவு (நேற்று), 9 மணியளவில் குண்டம் பற்ற வைக்கப்பட்டு, அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்குவர். நெரிசல் இல்லாமல் பக்தர்கள் குண்டம் இறங்க, கோவிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலை வலம் வந்து, கோவிலின் பின்புறம் உள்ள காரைவாய்க்காலில் குளித்து, குண்டத்தில் இறங்கும் வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ""நாளை (இன்று) இரவு 9 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா, ஏப்., 4ம் தேதி காலை 9.30க்கு பொங்கல் வைத்தல், மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. 7ம் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் எடுத்தல், மஞ்சள் நீர் விழா நடக்கிறது. 8ம் தேதி காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது, என்றனர்.