பதிவு செய்த நாள்
09
செப்
2019
11:09
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரான்மலை மங்கைபாகநாத சுவாமி, திருக்கொடுங்குன்றநாத சுவாமி, வடுக பைரவர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1992 ஏப்.,20 ம் தேதி நடந்தது.
அதற்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி துவங்கியது. கோயில் நிர்வாகத்துடன் பக்தர்களும் திருப்பணிக்கு தேவையான பொருளுதவிகளை செய்துவருகின்றனர். தற்போது கும்பாபிஷேகம் 27 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்.,12ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 4ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து செப். 9ம் தேதி முதல் யாகசாலபூஜை தொடங்குகின்றன. 10ம் தேதி 2 மற்றும் 3 ம் கால வேள்வி பூஜைகள்,பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும், 11ம் தேதி 4 மற்றும் 5ம் கால வேள்வி பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும், அதைத்தொடர்ந்து 12ம் தேதி காலை 4:00 மணிக்கு 6ம் கால வேள்வி பூஜைகளும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், தொடர்ந்து 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணமும், 9:00 மணிக்கு ஐம்பெருங்கடவுளர் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
கும்பாபிஷேகப் பணிகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்து வருகிறார்.300 ஊர்களை ஆண்ட வேள்பாரியின் தலைமை பதியாக விளங்கியதும், சங்க இலக்கியத்தில் பறம்புமலை என்று போற்றப்பட்டதுமான பிரான்மலையின் அடிவாரத்தில் குன்றக்குடி ஆதின நிர்வாகத்தின் கீழ் உள்ளது இக்கோயில். பாதாளம், மத்திமம், கைலாயம் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள இக்கோயிலில் சிவன் மூன்று நிலைகளில் காட்சி தருகிறார். பாதாளம் என்ற அடித்தளத்தில் சக்தி சொரூபமாக குயிலமுத நாயகி உடனுறை திருக்கொடுங்குன்ற நாதராகவும், மத்திமம் என்ற பூமித்தளத்தில் காசி விஸ்வநாதர்-விசாலாட்சியம்மையாகவும், கைலாசத்தில் கல்யாண கோலமாக அர்த்தநாரீஸ்வர ரூபமாக மங்கைபாகர் தேனம்மையாகவும் காட்சி தருகிறார். மத்திம தளத்தில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலில் 3 தலை, 3கால், 3 கைகளுடன் கூடிய ஸ்வரலிங்கேஸ்வரரும் உள்ளார்.