பதிவு செய்த நாள்
10
செப்
2019
12:09
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், வாணியர் சமூக நல சங்கம் சார்பில், 7ம் ஆண்டாக, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானார் பற்றிய சிறப்பு வழிபாடு நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானார்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி, வேள்வி பூஜை, அபிேஷக மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சிவனடியார் ஒருவர் சிவபெருமான் வேடமணிந்து, கோவிலின் பின்புறம் சென்று, அணையில் கரையை அடைப்பது போன்ற நிகழ்ச்சி நடந்தது. மதுரை, வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை அடைப்பதற்கு, அரிமர்த்தன பாண்டிய மன்னன், வீட்டுக்கு ஒருவர் வேலைக்கு வரவேண்டும் என உத்தரவிட்டார். வயதான வந்தியம்மையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதற்காக கூலி ஆள் ஒருவரை நியமனம் செய்ய வேண்டியிருந்தது.அப்போது, அவ்வழியாக கூலிக்கு ஆள் வேண்டுமா என கேட்டுக் கொண்டு சிவபெருமான் கூலியாளாக வந்துள்ளார்.வேலைக்கு சென்றால், உதிர்ந்த பிட்டு தருவதாக மூதாட்டி தெரிவித்தார். சிவபெருமானும், பிட்டு சாப்பிட்டு, வேலைக்கு செல்லாமல் படுத்து உறங்கினார்.
மூதாட்டியின் வேலை மட்டும் நிலுவையில் உள்ளதை அறிந்த, மன்னன் கூலியாளாக வந்த சிவபெருமானை அழைத்து கோலால் அடித்தபோது, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடி விழுந்தது.பின், சிவபெருமான் ஒரு சட்டி மண்ணை எடுத்து அணையில் கொட்டினார். அணையின் உடைப்பு முழுவதும் அடைப்பட்டது. மூதாட்டிக்கு சிவபெருமான் காட்சி கொடுத்துள்ளார் என, தெரிவிக்கப்பட்டது.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதாம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சங்கத் தலைவர் துரைசாமி, செயலாளர் வெள்ளிங்கிரி, பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் செய்தனர்.