விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சித்தணி பூர்ணா, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேம் நாளை நடக்கிறது.பண்டைய காலத்தில் பாளையக்காரர்கள் வசமிருந்த இக்கோவில், பின்னர் சித்தணி கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் காட்டுப் பகுதிக்குள் இருந்த இக்கோவில் 2007ம் ஆண்டு காடுகளை சீரமைக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு குல தெய்வமாக விளங்கும் இக்கோவில் தற்போது, அவருடைய முயற்சியாலும் மற்றும் குல தெய்வ வழிபாட்டுக்காரர்கள், கிராம பொது மக்களின் கூட்டு முயற்சியாலும் கோவிலுக்கு முன் புதியதாக மணி மண்டபம் கட்டப்பட்டு, கோவில் புதுப்பிக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்த நிலையில், இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை 11ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மகா கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.நாளை 11ம் தேதி காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு 9:00 மணிக்கு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள் செய்து வருகின்றனர்.