பதிவு செய்த நாள்
13
செப்
2019
12:09
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைந்த வழிபாட்டு விழா, வெகு விமரிசையாக நடந்தது. விழாவை ஒட்டி, 250 விநாயகர் சிலைகள், ஒன்றாக கரைக்கப்பட்டன. தமிழகத்திற்கு முன்னுதாரணமாக நடந்த இவ்விழாவை, மற்ற கோவில்களிலும், இனி வரும் ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் முதன் முறையாக, விநாயகர் சதுர்த்தி விழாவை, ஒருங்கிணைந்து நடத்த, வடபழனி ஆண்டவர் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த ஆண்டு, அப்பணி துவக்கப்பட்டது. கோவிலை சுற்றி வசிப்போருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று, களிமண்ணில் செய்யப்பட்ட, விநாயகர் சிலைகள், இலவசமாக வழங்கப்பட்டன. மொத்தம், 250 சிலைகள் வழங்கப்பட்டன. சிலையுடன், விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் நேரம், ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் அடங்கிய கையேடு மற்றும் பூஜைப் பொருட்களும் வழங்கப்பட்டன. ஒன்பதாம் நாளான, நேற்று முன்தினம், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட, 250 விநாயகர் சிலைகளை ஒருங்கிணைத்து, கரைக்கும் நிகழ்ச்சி, வடபழனி ஆண்டவர் கோவிலில் நடந்தது.
இதற்கு, பக்தர்களிடம், பெரும் வரவேற்பு எழுந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி அன்று, 1,000 முதல், 5,000 விநாயகர் சிலைகள், பக்தர்களுக்கு வழங்கி, கொண்டாட முடிவு செய்திருப்பதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த விநாயகர் சதுர்த்தி விழா குறித்து, பக்தர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவை, தமிழகத்தில், ஒவ்வொரு குடும்பத்தினரும், தனிப்பட்ட விழாவாக, கொண்டாடி வருகின்றனர். வடபழனி ஆண்டவர் கோவில் நிர்வாகம் சார்பில், முதன் முறையாக, ஒருங்கிணைந்த விழாவாக நடத்தி, பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். விழாவை ஒருங்கிணைத்து நடத்துவதால், பக்தி தழைத்தோங்கும்; சமூக நல்லுணர்வு வளரும்; ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும். இவ்விழாவை, அனைத்து கோவில்களிலும் நடத்த வேண்டும். இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும். அடுத்த ஆண்டு, அனைத்து கோவில்கள் சார்பில், 50 லட்சம் விநாயகர் சிலைகளை, பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.