பதிவு செய்த நாள்
13
செப்
2019
12:09
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரண்மனை பகுதியில் உள்ள கோட்டை வாசல் விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் கோட்டை வாசல் விநாயகர் கோயில் உள்ளது. சேதுபதி மன்னர் காலத்தில் கோட்டைக்குள் நுழையும் போது விநாயகரை வணங்கி தான்உள்ளே செல்வார். அரண்மனையில் உள்ள மன்னர் குடும்பத்தினர் மட்டுமல்லாது அனைவரும் கோட்டை வாசலில் அமைந்திருந்த விநாயகரை வணங்கி செல்வார்கள். பிரபலமான கோட்டை வாசல் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. செப்., 10ல் காலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னஷே்வர பூஜையுடன் தொடங்கியது. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல்கால யாக சாலை பூஜை 108 திரவிய ேஹாமத்துடன் நடந்தது. செப்.,11ல் காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, பகல் 12:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், பூர்ணாகுதி, தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு திரவியஹோமம், வேத பாராயணம் நடந்தது.நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை 7:45 மஹா பூர்ணாகுதி, தீபாரதனை நடந்தது. 8:15க்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 8:25 க்கு மூலஸ்தான மஹா அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் செய்திருந்தனர். செப்., 24ல் மண்டாலாபிஷேகம் நடக்கவுள்ளது.