மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்காக ரூ 12 கோடி மதிப்பில் திருப்பணிகளை தருமபுரம் ஆதின குருமகா சன்னிதானம், இளைய சன்னிதானம் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட பல்வேறு இந்து அமைப்புகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனைத்தொடர்ந்து தருமபுரம் ஆதினம் மற்றும் இந்து அறநிலையத்துறை இணைந்து வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானித்தனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 9 மணிக்கு கோயில் திருப்பணி செய்வதற்கான, அடிக்கல் நாட்டு விழா தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானம் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கணபதிஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பின் தருமபுரம் ஆதினம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.