பதிவு செய்த நாள்
13
செப்
2019
12:09
மேல்மருவத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று திறந்தார். பின், அடிகளாரின் ஆன்மிக வாழ்க்கையை பாராட்டி, அவர் பேசினார்.
மகிழ்ச்சி: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின், தியான மண்டப திறப்பு மற்றும் பங்காரு அடிகளாரின், 80வது பிறந்த நாள் விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், நேற்று, நடைபெற்றது.இதில் பங்கேற்க, சித்தர் பீடம் வந்த, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை, ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர்.பின், தியான மண்டபத்தை திறந்து வைத்து, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:தாமரை பீடத்தில் அமர்ந்து, அருளாசி வழங்கும், ஆதிபராசக்தி அம்மனை வணங்கியது மகிழ்ச்சிக்குரியது.ஆன்மிகத்தில், ஜாதி, மத பேதமின்றி, பெண்கள் அனைவரும், ஆதிபராசக்தி அம்மன் கருவறைக்கு சென்று, அவர்களே வழிபடுவது போற்றுதலுக்குரியது. பங்காரு அடிகளாரின், 50 ஆண்டு ஆன்மிக வாழ்க்கையை பாராட்டி, அவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது சிறப்புக்குரியது. அடிகளாருக்கு, அடுத்ததாக, பத்மபூஷண் விருது கிடைக்க வேண்டுகிறேன். வாழ்க்கை வரலாறு தியான மண்டம், மிக சிறப்பாக அமைந்துள்ளது. கல்வி, மருத்துவ சேவையில், சித்தர் பீடம், சீரிய முறையில் செயல்படுவதும் பாராட்டுக்குரியது.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். தியான மண்டபத்தில், பங்காரு அடிகளாரின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.