திருக்கனுார்: செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி – பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு, யஜமான சங்கல்பம், வாஸ்து ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:10 மணிக்கு கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு முதலாம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று, மண்டலாபிஷேகம் துவங்கியது.