சிவகங்கை: சிவகங்கை அருகே நடந்த நரிக்குறவர் திருவிழாவில் எருமைகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. சிவகங்கை அருகே பையூர் பழமலைநகரில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் 400க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு மூன்று நாட்கள் திருவிழா நடத்துவர். உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை 5:00 மணி வரை இத்திருவிழா நடந்தது.
இதில் 25க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை கோயில் முன்நிறுத்தி ஒவ்வொரு மாடுகளின் கழுத்தை அறுத்து அதிலிருந்து வந்த ரத்தத்தை பூஜாரிகள் உட்பட அனைவரும் குடித்தும், உடலில் பூசிக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து 30 க்கும் மேற்பட்ட ஆடுகளும் பலியிடப்பட்டன. அவற்றின் இறைச்சியை சமைத்து உறவினர்களுக்கு விருந்து படைத்தனர். நரிக்குறவர்கள் கூறியதாவது: மழைவேண்டியும், எங்களின் தொழில் சிறக்கவும், காளிக்கு எருமை மாட்டின் ரத்தத்தை படையலிட்டு வழிபடுவோம். இத்திருவிழாவை நடத்தவில்லை என்றால், எங்கள் குலம் விருத்தியாகாது, தொழில் சிறக்காது என்று முன்னோர் தெரிவித்து உள்ளார்கள். இதற்காகவே இத்திருவிழாவை விடாமல் நடத்தி வருகிறோம், என்றனர்.