பதிவு செய்த நாள்
20
செப்
2019
11:09
திருப்பூர்: புரட்டாசி சனிக்கிழமையை உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள், திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
நாளை முதல் புரட்டாசி சனிக்கிழமை என்பதால், கோவில்களில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழிபாடு நடத்துவர். அதற்காக, பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக, தடுப்பு வரிசை அமைக்கப்பட்டுள்ளது.அதிகாலையில், ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமதே வீரராகவப்பெருமாளுக்கு, மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடக்கும். அடுத்தாக, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.தொடர்ந்து, கோவில் கொடிமரம் அருகே, கருட வாகனத்துடன் பக்தர்களுக்கு சேவைசாதிக்க இருக்கிறார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வர் என்பதால், 50 ரூபாய் சிறப்பு ’டிக்கெட்’ வரிசையும், பொதுதரிசன வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில், 1,200 பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்யவும், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு, அன்ன பிரசாதம் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி அருகே மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும், புரட்டாசி சனிக்கிழமை நாளில், பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.