பதிவு செய்த நாள்
20
செப்
2019
11:09
மயிலாப்பூர்: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, மயிலாப்பூர் மாட வீதிகளில், விதவிதமான பொம்மைகள், விற்பனைக்கு வந்துள்ளன.
முப்பெரும் தேவியரை வழிபடும், நவராத்திரி விழா, 29ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு, கோவில்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவிற்காக, மயிலாப்பூர் மாடவீதிகளின் நடைபாதைகளில், பொம்மை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிசை தொழிலாக பொம்மைகள் செய்து, வர்ணம் தீட்டப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகள், மிக அழகாக காட்சியளிக்கின்றன.
முப்பெரும் தேவியர், பெருமாள், காளி போன்ற சுவாமி பொம்மைகளுடன், பல கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன், குறத்தி போன்ற பாரம்பரிய நிகழ்வுகளை நினைவுபடுத்தும் பொம்மைகள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள், ரோபோ பொம்மைகளும் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களது பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளன.
கொலு பொம்மைகள் விற்பனை குறித்து, நவராத்திரி நடைபாதை மண்பொம்மை வியாபாரிகள் சங்க செயலர், அசோக்குமார் கூறியதாவது:இந்தாண்டு, அத்தி வரதர் பொம்மை தான் புதுமை. அதை, பலர் வாங்கிச் செல்வதுடன், சந்திரயான் - 2 பொம்மையை, கேட்டு வருகின்றனர். மாடவீதிகளில், 60 ஆண்டுகளாக கடை அமைத்து வருகிறோம். இந்த பகுதியில், எங்கள் சங்கம் மூலம், 85க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாருக்கும், எந்த வித இடையூறும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு, அடையாள அட்டை வழங்கியுள்ளோம்.
காஞ்சிபுரம், கடலுார், பண்ருட்டி போன்ற பகுதிகளில், குடிசை தொழிலாக செய்யப்பட்ட பொம்மைகளை, விற்பனைக்கு வைத்து உள்ளோம். இங்கு, 10 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை, பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள், எங்களிடம் பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். வெளிநாடுகளுக்கும், இங்கிருந்து பொம்மைகள் வாங்கி, சிலர் அனுப்புவர்.இவ்வாறு, அவர் கூறினார்.