பதிவு செய்த நாள்
20
செப்
2019
03:09
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல
நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
அகண்ட தீபம்: சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர். இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர். துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள். பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.
சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், "" பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
விரத முறை: திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான "நவநீதமும் படைப்பதுண்டு. "அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு. எல்லோரும் பக்திப் பெருக்குடன், ""கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர். அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று பிûக்ஷ எடுத்து வரச் சொல்லுவர். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே "கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்
சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக
மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும். ஏனையோர் புரட்டாசி மாசத்து
சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்.