பதிவு செய்த நாள்
21
செப்
2019
12:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில், அதன் உபகோவில்களில், பேனர்கள் வைப்பதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. திருத்தணியில், முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள் என, மொத்தம், 29 கோவில்கள் உள்ளன.
மேலும், முருகன் கோவிலுக்கு சொந்தமாக, ஏழு திருமண மண்டபங்கள், 3 தேவஸ்தான விடுதிகள் உள்ளன.சென்னை உயர் நீதி மன்றம், பேனர்கள் வைப்பதற்கு தடை விதித்து உள்ளது. இதையடுத்து, திருத்தணி முருகன் கோவில், உபகோவில்கள் மற்றும் மண்டபங்களில், பேனர் வைக்கக் கூடாது என, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, திருத்தணி முருகன் கோவில் இணை- ஆணையர், பழனிகுமார் கூறியதாவது: பேனர்கள் வைப்பதற்கு, அரசு தடை விதித்துள்ளது. இதனால் முருகன் கோவில், அதன் உபகோவில்கள், தேவஸ்தான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில், அரசியல் மற்றும் கோவில் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து, பேனர்கள் வைக்கக் கூடாது.பேனர் வைப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க தவறும் கோவில் ஊழியர்கள் மீதும், நடவடிக்கை பாயும்.இவ்வாறு, அவர் கூறினார்.