பதிவு செய்த நாள்
26
செப்
2019
11:09
திருப்பூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று உழவாரப்பணி நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் கொலு வைத்து வழிபாடும், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வரும், 28ம் தேதி இரவில் இருந்து, நவராத்திரி கொலு வழிபாடு துவங்க உள்ளது.
கோவில் வளாகத்தில், 13 படிக்கட்டுகளுடன் கூடிய கொலுமேடை அமைத்து, பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைத்து அலங்கரிக்கப்படும். தினமும், சுமங்கலி பெண்கள், பக்தர்கள் கூடி, நவராத்திரி பூஜை செய்து, பிரசாதம் வழங்குவர். அதிக அளவில், சிறுவர், சிறுமிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர், கோவில் முழுவதும் நேற்று உழவாரப்பணி மேற்கொண்டனர். கோவில் உள் மற்றும் வெளி பிரகாரம், கர்ப்பகிரஹத்தை சுற்றியுள்ள முதல் சுற்றுப்பிரகாரம், மகா மற்றும் அர்த்த மண்டபம், 63 நாயன்மார் மண்டபம் ஆகிய பகுதிகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். சிவனடியார்கள் கூறுகையில், ‘தேர்த்திருவிழா உட்பட, ஒவ்வொரு விழாவின் போதும், உழவாரப்பணி நடக்கும். கோவில் முழுவதையும் சுத்தம் செய்த பிறகு, மழை பெய்ததால், வெளிப்பிரகாரமும் சுத்தமாகிவிட்டது. உழவாரப்பணியில் ஈடுபடுபவர், இறைவனுக்கு தொண்டு செய்த புண்ணியத்தை பெறுகின்றனர்,’ என்றனர்.