பதிவு செய்த நாள்
26
செப்
2019
01:09
கிருஷ்ணகிரி: இந்த ஆண்டு, கொலுபொம்மைகளின் விலை, 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
நவராத்திரி விழா வரும், 29ல் துவங்குகிறது. இந்த நாட்களில், வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து, ஒன்பது நாளும் மக்கள் பூஜை செய்வது வழக்கம். இதையொட்டி, கடந்த ஐந்து மாதமாக, கிருஷ்ணகிரி பழைய பேட்டையில், கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு, நவநரசிம்மர் செட், திருப்பதி செட் ஆகியவை புதிதாகவும், ராதை அலங்காரம், விஸ்வரூப தரிசனம், கிருஷ்ணலீலை, இந்திரஜித், ஜோதிலிங்கம், விவசாய செட் உட்பட, 30க்கும் மேற்பட்ட கொலு பொம்மை செட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர்.
இது குறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது: காஞ்சிபுரம், கடலூருக்கு அடுத்து, கிருஷ்ணகிரியில் தான் அதிகளவில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது. பெங்களூரு மக்கள், 80 சதவீத பொம்மைகளை வாங்குகின்றனர். 40 பொம்மைகள் வரையுள்ள ஒரு செட், 200 முதல், 5,000 ரூபாய் வரையும், தனி பொம்மைகள், 100 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையாகிறது. 50 சதவீதம் களிமண்ணாலும், 50 சதவீதம் காகிதத்தாலும் பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது களிமண் எடுக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால், 60 சதவீதம் மட்டுமே, இங்கு தயாரிக்கப்படுகிறது. 40 சதவீத பொம்மைகள் மதுரை, புதுச்சேரி, காஞ்சிபுரத்திலிருந்து வாங்கி வரப்படுகிறது. இதனால், போக்குவரத்து மற்றும் கூலி அதிகரிப்பால், இந்த ஆண்டு, 20 சதவீதம் வரை கொலு பொம்மை விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.