நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்தில் இருந்து இன்று காலை புறப்படும் நவராத்திரி பவனிக்காக, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை நேற்று காலை பல்லக்கில் புறப்பட்டார்.
இருமாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தி வழியனுப்பினர்.திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மனாபபுரம் அந்த அரசின் தலைநகராக இருந்தது. நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், இங்கு நடந்து வந்த நவராத்திரி விழா தடைபடாமல் இருக்கும் வகையில் பத்மனாபபுரம் சரஸ்வதி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டன.மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பின்னரும் மரபு மாறாமல் இருமாநில உறவை வலுப்படுத்தும் நிகழ்ச்சியாக தொடர்கிறது.செப்., 29ல் தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து பவனி புறப்படுகிறது.
இதற்காக நேற்று காலை சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை பல்லக்கில் பவனியாக புறப்பட்டார். பக்தர்கள் பூக்களை துாவ, முத்துக்குடை ஏந்திய பெண்கள் அணிவகுக்க, தமிழகம் மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்த பவனி புறப்பட்டது. நேற்று இரவு இந்த பவனி பத்மனாபபுரம் வந்தது. இன்று காலை வேளிமலை முருகன் பல்லக்கில் பத்மனாபபுரம் வந்ததும், சரஸ்வதி சிலையை யானை மீது ஏற்றி பவனி புறப்படும்.இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், மற்றும் இருமாநில உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.