திருப்பதி: திருமலை கோயில் பரிமளத்தால் சுத்தம் செய்யப்பட்டது.
திருப்பதி திருமலை கோயிலில் பிரம்மோற்சவ விழா துவங்குவதை முன்னிட்டு கோயிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காலை 6 மணியில் இருந்து பகல் 10 மணி வரை நான்கு மணி நேரம் நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் நிர்வாக அதிகாரி தலைமையில் கோயிலை சுத்தம் செய்தனர். இந்த நேரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. வைகுண்ட ஏகாதசி, ஆனி திருவிழா, தெலுங்கு வருட பிறப்பு மற்றும் பிரம்மோற்சவ விழா என்று வருடத்திற்கு நான்கு முறை கோவில் சுத்தம் செய்யப்படும். சுத்தம் செய்வதற்கு பரிமளம் எனப்படும் மூலிகை வாசனை பொருட்கள் பயன்படுத்தப்படும்.