பதிவு செய்த நாள்
01
அக்
2019
12:10
திருப்பதி: திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை உற்சவரான மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவினை முன்னிட்டு பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மாடவீதிகளில் நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. திருமலையில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது, ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது. அதன்படி, திருமலையில், நேற்று வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது. ஏழுமலையான் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முப்பத்து முக்கோடி தேவர்களை பிரம்மோற்சவத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்து, கருடகொடியை அர்ச்சகர்கள் கொடிமரத்தில் ஏற்றினர். பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை உற்சவரான மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
அலங்காரம்: பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமலை பஸ் நிலையத்திலிருந்து துவங்கி அலிபிரி வரையிலும், திருமலையில் உள்ள கருடாத்திரி நகர் சோதனை சாவடியிலிருந்து திருமலை முழுவதும் பல்வேறு கடவுளர் உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பொழுதுபோக்கிற்காக பாபவிநாசம் செல்லும் பாதையில் மலர் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தான அருங்காட்சியகத்திலும் ஏழுமலையானின் ஆபரணங்களின் வீடியோபதிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்: திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இன்று முதல் அக்., 8 வரை ஆர்ஜித சேவைகள், பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும், வி.ஐ.பி., பிரேக் தரிசனம், இலவச முதன்மை தரிசனங்களான மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தரிசனங்களை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் பிரம்மோற்சவ நாட்களில், வாடகை அறை முன்பதிவு உள்ளிட்டவை, நன்கொடையாளர்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படும் என்றும், தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும், 1,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகன சேவையை காண, 19 பெரிய திரைகள், திருமலை முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு சேவைகள் வழங்க, தினமும், 3,000 ஸ்ரீவாரிசேவார்த்திகள் ஈடுபட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, மருத்துவ முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பிரம்மோற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு, முழு நேரமும், அன்னதானம், குடிநீர், காபி, டீ, பால் மோர் உள்ளிட்டவை வழங்க, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.