புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகரான பாலக்காடு கே.வி. நாராயண சுவாமியின் வாழ்வில் காஞ்சி மகாசுவாமிகளின் அருள் தொடர்பான ஒரு முக்கிய சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம். ஒருமுறை நாராயணசுவாமி கச்சேரி நிகழ்த்த அமெரிக்கா சென்றார். அவரது மனைவி, தன் கணவர் கச்சேரி முடித்து நல்லபடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மகாசுவாமிகளை தரிசிக்கப் புறப்பட்டார். “நீ மட்டும் வந்திருக்கியே? எங்கே அவர் வரலையா? சீமைக்குப் போயிருக்காரா?’ என விசாரித்தார் சுவாமிகள். தன் கணவர் கச்சேரி நிகழ்த்த அமெரிக்கா சென்றிருப்பதைத் தெரிவித்தார் திருமதி நாராயணசுவாமி. ’அப்படியா...நல்லது. பிரசாதம் வாங்கிக்கோ!’ என கைநிறைய குங்குமம் கொடுத்தார். எல்லோருக்கும் கொஞ்சம் தானே கொடுத்தார், அப்படியிருக்க எனக்கு மட்டும் ஏன் குங்குமத்தை அள்ளிக் கொடுத்தார் என அவரது மனைவி யோசித்தார்.
அருள் பொங்கப் பார்த்த சுவாமிகள்,“ சமுத்திரம் தாண்டிப் போயிருக்கும் உன் கணவர் நல்லபடியா இந்தியா திரும்பி வரணும்னு அம்பாளைப் பிரார்த்தனை பண்ணிக்கோ!” என ஆசியளித்து அனுப்பினார். வீட்டிற்கு வந்த நாராயணசுவாமியின் மனைவிக்கு ஓரிரு நாட்களுக்கு பின் தகவல் ஒன்று வந்தது. அமெரிக்கா சென்ற கணவர் விஷக் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காஞ்சி மகாசுவாமிகளை மனதார வேண்டினார் திருமதி நாராயணசுவாமி. அவரது கருணையால் கணவரின் உடல்நலம் மெல்ல தேறியது. ஒப்புக் கொண்ட கச்சேரிகளை நல்லவிதமாக முடித்துக் கொண்ட அவர் விரைவில் இந்தியா திரும்பினார். பிறகு தம்பதியாக மகாசுவாமிகளை தரிசிக்க வந்தனர். “ அமெரிக்க பிரயாணம் நல்லபடியா அமைஞ்சுதா? இப்போ உடம்பு பூரணமா குணமாயிடுத்து இல்லியா? இனி வாழ்வில் எல்லாம் சுகமாக அமையும்’ என சுவாமிகள் வாழ்த்திய போது இருவரின் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. திருப்பூர் கிருஷ்ணன்