வீரபாண்டி: புரட்டாசி திருவிழாவையொட்டி, காவகிரி பெருமாளுக்கு இன்று திருக்கல்யாணம், நாளை திருத்தேரோட்டம் நடக்கவுள்ளது.
சேலம், சீரகாபாடியில் உள்ள பழமையான காவகிரி மலைக்கோவிலில், புரட்டாசியில் தேர் திருவிழா நடக்கும். நடப்பாண்டு விழா, கடந்த, 6ல் துவங்கியது. மறுநாள் கொடியேற்றம் நடந்தது. இன்று மதியம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத காவகிரி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலையில், தேர் கலசம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படவுள்ளது. தொடர்ந்து, சீரகாபாடி பிரதான சாலை, பெரிய மாரியம்மன் கோவில், சமத்துவபுரம் பகுதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை காலை, 7:00 மணியிலிருந்து, 8:00 மணிக்கு உற்சவர் சிலைகள் தேருக்கு எழுந்தருள உள்ளனர். மாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து மலைக்கோவிலை வலம் வருவர். வரும், 13 மாலை விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, 5:00 மணிக்கு மேல் உலக நன்மைக்காக, 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 14ல் மஞ்சள் நீராட்டு விழா முடிந்து, உற்சவர் சிலைகள் மலைக்கோவிலுக்கு எடுத்து செல்வதுடன் திருவிழா நிறைவு பெறும்.