பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள கூத்தப்பாடியில், பழமை வாய்ந்த தருமராஜா கோவில் உள்ளது. இங்கு மகாபாரதத்தில் வரும் தர்மர், திரவுபதி உள்பட பஞ்சபாண்டவர்களின், 16 சிலைகள் உள்ளன.
கூத்தப்பாடி, குள்ளாத்திரம்பட்டி, போச்சாரம்பட்டி, அக்ராகரம், மடம், சின்னப்பல்லலூர் உள்ளிட்ட ஏழு கிராம மக்களுக்கு சொந்தமான கோவில். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், திரவுபதியம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் சிலைகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் தலை மீது கொண்டு சென்று வழிபாடு செய்வர். அப்படி செய்தால், மழை பெய்து விவசாயம் செழிக்கும், மக்கள் நலமுடன் இருப்பர் என நம்பப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் கூத்தப்பாடியில் உள்ள தருமராஜா கோவிலிலிருந்து திரவுபதியம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் சிலைகளை பக்தர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலை மீது தூக்கி சென்றனர். அப்போது, கிராம மக்கள் திரவுபதியம்மனுக்கு பட்டு புடவை உடுத்தி, மஞ்சள், குங்குமம் மற்றும் தாலி அணிவித்து பூஜை செய்தனர். இதை தொடர்ந்து, திரவுபதியம்மனின் தாய் வீடு என கூறும் மடம் கிராமத்தில், நேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில், பக்தர்கள் சிலைகளுடன் தீக்குண்டம் இறங்கி வழிபட்டனர்.