பதிவு செய்த நாள்
16
அக்
2019
12:10
திருப்பூர்: கரூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமையான, கிரந்த எழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி., நான்காம் நுாற்றாண்டு முதல் வரி வடிவ எழுத்துமுறையும், கி.பி., 11ம் நுாற்றாண்டு வரை வட்டெழுத்துக்களும் இருந்தன. சோழ பேரரசு வட்டெழுத்துக்கு மாற்றாக, தமிழ் எழுத்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. ‘வடமொழி’ எழுத்துக்களை, ‘கிரந்தம்’ என்ற பெயரில் பயன்படுத்தினர்.
திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம், கரூர் அருகே கிரந்த எழுத்துக்களுடன் கல்வெட்டு கண்டறிந்துள்ளது. அதில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பரமத்தி அருகிலுள்ள முன்னூரில், 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த மொழி கல்வெட்டை கண்டறிந்துள்ளனர். வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: கரூரில் கண்டுபிடித்துள்ள கல்வெட்டு, 110 செ.மீ., உயரமும், 43 செ.மீ., அகலமும் கொண்டுள்ளது. ஆறு வரிகளில், கிரந்த மொழி எழுத்துக்கள் உள்ளன. பல்லவ மன்னர் ராஜசிம்மன், 8ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளார். ‘கிரந்த’ எழுத்துக்களை மயில், பாம்பு, அன்னபறவை, பல்வகை கொடி போன்ற எழில் வாய்ந்த சித்திரங்களாக எழுதி, பயன்படுத்தியுள்ளனர். கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் திரிசூலம், நந்தி, சங்கு மற்றும் குளம் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு, 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.