திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2019 01:10
திருச்சி: திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில் நடைபெற்ற துலா ஸ்நானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமம் என்பது நம்பிக்கை. குடகு மலையில் இருந்த புறப்பட்டு பூம்புகாரில் கடலில் கலக்கும் காவிரி நதியில் மூன்று இடங்கள் மிகவும் விசேஷமான தீர்த்த கட்டங்களாக நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி முதலாவது திருச்சியில் உள்ள திருப்பராய்த்துறை, இரண்டாவது கும்பகோணம், மூன்றாவது மயிலாடுதுறை ஆகும். ஐப்பசி முதல் நாளில் திருப்பராய்த்துறையில் நீராடி, ஐப்பசி கடைசி நாளில் மயிலாடுதுறையில் நீராடி அங்குள்ள சிவதலங்களில் சாமி தரிசனம் செய்தால் துன்பம் நீங்கி, இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை. இதனை முன்னிட்டு ஐப்பசி மாதத்தின் முதல் நாளான இன்று சூரியோதய நேரத்தில் திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் வெள்ளியிலான ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து காவிரி கரைக்கு தாருகனேஸ்வரர் எடுத்து வரப்பட்டார். அங்கு சிவபெருமானோடு எடுத்து வரப்பட்ட அஸ்திர தேவர் ஆனது சிவசிவ எனும் பக்தி கோஷத்தோடு காவிரி ஆறு நீருக்குள் எடுத்து செல்லப்பட்டது. அங்கு முதலில் அஸ்திர தேவருடன் கோயில் அர்ச்சகர்கள் காவிரி நீருக்குள் மூழ்கி தீர்த்தவாரி நடைபெறும். அதனை தொடர்ந்து ஹர ஹர மகா தேவா, ஓம் நமசிவாய என பக்தி பரவச கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகண்ட காவிரி ஆற்றினுள் மூழ்கி புனித நீராடினர். இவ்வாறாக காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்ற பின்னர் பக்தர்கள் அனைவரும் தாருகாவனேஸ்வரர் கோயிலிற்கு சென்று சாமி கும்பிட்டனர். துலா ஸ்நானத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.