பதிவு செய்த நாள்
18
அக்
2019
01:10
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு, சாலைவிநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இது, எஸ்.வி., ரோடு, கடைவீதி, மகாத்மா காந்தி சாலை, வெளிபேட்டை தெரு, சுண்ணாம்புகார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
* கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் ரோடு, சித்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. விநாயகருக்கு, 888 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள் அலங்காரத்தில் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி, ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் நீண்ட வரிசைவில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது.