பாறசாலை நாகரம்மன் கோயிலில் பப்பாளி காயில் நாகரூபம்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2012 10:04
களியக்காவிளை : பாறசாலை அருகே சாஸ்தான்விளை நாகரம்மன் காவு கோயில் வளாகத்தில் பப்பாளி காய்க்குள் நாகரூபம் தென்பட்டதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். பாறசாலை அருகே நெடுவாளை, சாஸ்தான்விளை நாகரம்மன் காவு கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோயிலில் நாகரம்மன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். சாஸ்தான்விளை நாகரம்மன் டிரஸ்ட்டின் கீழ் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் ஆயில்ய பூஜைகள் நடக்கிறது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டைய திருவிழா கடந்த மார்ச் 30ம் தேதி துவங்கி ஏப்ரல் 7ம் தேதி நிறைவடைந்தது. எட்டாம் கொடைவிழா நாளை(12ம் தேதி) நடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் நின்ற பப்பாளி மரத்தில் இருந்து பப்பாளி காயை கோயிலில் உளவாரப்பணி செய்யும் பங்கஜாட்சி(80) பறித்தார். அந்த பப்பாளி காயை வெட்டிய போது அதில் நாகரூபம் தென்பட்டது. இதை பார்த்து பக்தி பரவசமடைந்த பங்கஜாட்சி அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். பப்பாளியில் காணப்பட்ட நாகரூபம் கோயில் வளாகத்தில் கண்ணாடி ஜாடியில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இதை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாகரம்மனை பயபக்தியுடன் வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வரிசையில் நின்று நாகரம்மனை தரிசிக்க கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து பங்கஜாட்சி கூறியதாவது: நான் கடந்த 50 ஆண்டுகளாக கோயிலில் பூஜை பொருட்கள் எடுத்து வைக்கும் பணியை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்து செல்லும் போது கோயில் வளாகத்தில் நிற்கும் பப்பாளி மரத்தில் இருந்து ஒரு காய் பறித்தேன். அதை வெட்டிய போது நாகரூபம் தென்பட்டது. இதை பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து கோயில் முன் நாகரூபம் தென்பட்ட பப்பாளி காயை கொண்டு வைத்தேன். இவ்வாறு பங்கஜாட்சி கூறினார்.
கோயில் பூஜாரி கார்த்திக் கூறியதாவது: நான் கடந்த 12 ஆண்டுகளாக சாஸ்தான்விளை நாகரம்மன் கோயிலில் பூஜை செய்து வருகிறேன். மாதந்தோறும் இக்கோயிலில் நடக்கும் ஆயில்ய பூஜை சிறப்பானதாகும். பப்பாளி காயில் தோன்றிய நாகரூபம் இறைவனுடைய அற்புத லீலையாகவே தோன்றுகிறது. இவ்வாறு பூஜாரி கார்த்திக் கூறினார்.