மனிதர்களின் இன்னல்களை போக்குவேன் என உறுதிமொழி எடுத்தவனே! உலக மக்களின் சிறந்த உறவே! காஞ்சி என்னும் புனித நகரில் வாழ்பவனே! அழகிய குளத்தில் உள்ள அத்தி வரதனே! உன்னை சரணடைகின்றோம்.
தாருசில்ப மயம் தேவம் சாரு சாரு தர்சன செளபகம்! ஸர்ப்ப ராஜாங்க பர்யங்க சாயினம் வரதம் நும:!! யாகத்திற்கு பயன்படும் மரத்தில் வடிவமைத்த உன் அழகான உருவத்தை பார்க்க எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? பாம்பின் மடியில் படுத்துக் கொண்டு உலகை காக்கும் வரதனே! உன்னை வணங்குகிறோம்.
நான்கு கைகளை உடைய உனது வடிவம் நான்முகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நான்கு வித பயன்களான அறம், பொருள், இன்பம், வீட்டை அளிப்பவனே! எங்களுக்கு அவற்றை அடையும் பேற்றை அளிப்பாயாக!
தாமரை கண்களை உடையவனே! எள்ளின் பூ போன்ற மூக்கு கொண்டவனே! பக்தரின் மனதை கொள்ளை கொள்ளும் உடல் அழகு கொண்டவனே! உன் திவ்யமான வடிவை கண்டாலே எங்களுக்கு ஐஸ்வர்யம் சேரும்.
வல்லபாசார்யர் விசேஷமான இட்லி தந்து உபசரித்ததில் திருப்தி அடைந்தாய் என நான் அறிவேன்! எங்களின் விருப்பம் நிறைவேற நீ விரும்புவதை என்றும் அளித்து மகிழ்வோம்.
ஒரு முறை உன் திவ்ய வடிவைக் கண்டாலே புண்ணியம் அல்லவா! இருமுறை பார்த்தால் மிக புண்ணியம் அல்லவா! ஒருவன் தன் வாழ்நாளில் மூன்று முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு புண்ணியம் என்பதை அளக்க முடியாது.
உத்தானே வா சயானே வா தர்ஷனம் ஸத்ஸுமங்களம்! வக்ஷஸ்தல் ஸ்ரீயா ஸார்த்தம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்!!
நின்ற, படுத்த கோலத்தில் உன்னை தரிசிப்பது நல்ல மங்களத்தை அளிக்கக் கூடியது. எப்படியானாலும் மார்பினில் மகாலட்சுமியுடன் சேர்ந்திருக்கும் காட்சி எல்லா சவுபாக்கியங்களையும் அளிக்க வல்லது.