பதிவு செய்த நாள்
22
அக்
2019
03:10
நம் நாட்டில் எத்தனையோ சம்பிரதாயங்கள் உள்ளன. அவற்றை எதற்காக செய்கிறோம் என உணர்ந்து, நம் முன்னோர் கடைபிடித்தனர். அதை ஏன் செய்கிறோம் என இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவில்லை. எனவே அவற்றை நாம் வெறும் சடங்காகச் செய்கிறோம். அவற்றில் ஒன்று திருமணத்தில் நடக்கும் ’சப்தபதி’ நிகழ்வு. மணமகளின் கழுத்தில் மாங்கல்ய சூத்திரத்தைக் கட்டியதும், மணமக்கள் ஒருவரது விரலை மற்றவர் பிடித்துக் கொண்டு, மந்திரத்தைச் சொல்லியபடி ஏழு அடி வைத்து நடப்பர்.
அந்த மந்திரத்தின் பொருள், ’நாம் இருவரும் இந்த ஏழு அடிகளை எடுத்து வைத்ததன் மூலம் இனிய வாழ்வில் இணைந்து விட்டோம். நான் உனதாகி விட்டேன். நீயின்றி நான் வாழமுடியாது, நானின்றி நீ வாழ முடியாது. இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியை அனுபவிப்போம். சொல்லும், பொருளும் போல நாம் வாழ்வில் இணைந்திருப்போம்’. இதைச் சொன்னவாறே அவர்களின் இல்லற வாழ்வு தொடங்குவதாக பொருள்.
வாரத்திற்கு ஏழு நாட்கள் போல ஏழு என்ற எண் நம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் வருகிறது. அதே போல மனம் விழித்தெழ ஏழு கட்டளைகள் இங்கு இடம் பெற்றுள்ளன.
* உங்களுக்குள் ஆற்றலும், சக்தியும் புதைந்து உள்ளது என நம்புங்கள். ஆற்றலை செயல்திட்டமாக மாற்றி சாதனை படைக்க மூன்று விஷயங்கள் தேவை. அவை உடல் மற்றும் மனதின் சக்தி, திறமை, உங்களைக் கவர்ந்த ஒரு ரோல் மாடல்.
* உங்களை இடைவிடாமல் செயல்பட வைக்கும் உன்னதமான குறிக்கோள் வேண்டும். ஆற்றலுக்குச் சவால் விடும் அளவிற்கு குறிக்கோள் இருக்க வேண்டும். அதுவே ’உன்னதமான குறிக்கோள்’. குறிக்கோளை எக்காரணத்தாலும் விட மாட்டேன் என சத்தியம் செய்யுங்கள். குறிக்கோளை மையமாகக் கொண்டு அதை அடைய தேவையான அறிவு, திறமையை வளர்க்கும் செயல்திட்டத்தை தீட்டுங்கள்.
* வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எப்படி சாதித்தனர் எனத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் வாழ்க்கை வரலாறைப் படியுங்கள்.
* ’நான் தான் என் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயம் செய்வேன்’ என நம்புங்கள். இன்றைய வாழ்க்கை இதுவரை செய்த செயல்களின் விளைவு. வரும் காலத்தில் உங்களின் வாழ்க்கைத் தரம் என்பது, இப்போது செய்யும் செயல்களின் வெளிப்பாடு என நம்புங்கள். ’எனது எதிர்காலம் என் கையில்’ என நம்புங்கள்.
* உங்களின் திறமை, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தினமும் இரண்டு மணி நேரம் தொழில் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படியுங்கள். காலத்தால் அழியாதது அறிவு ஒன்றே. கல்வியைப் பற்றி ஒரு பாடல்:
வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவின்றிக் குறைவுறாது
கள்ளருக்கோ பயமில்லை காவலுக்கோ
மிக எளிது கல்வியென்னும்
உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப்
பொருள் தேடி உழல்கின்றாரே!
* ’நேர்மையாக உழைத்து முன்னேற முடியும். குறுக்கு வழி அவசியம் இல்லை. எந்த நிலையிலும் நேர்மையை கைவிட மாட்டேன்’ என உறுதி கொள்ளுங்கள். இனிக்கிற வாழ்வே கசக்கும், கசக்கற வாழ்வே இனிக்கும் என்பதை உணருங்கள்.
* ’குறிக்கோளை கண்டிப்பாக அடைவேன்’ எனும் உறுதியை மற்றவர்களுக்கு உணர்த்துங்கள். குறிக்கோளை மற்றவர்களோடு பகிர்வதால் அதை அடைய வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்படும். குறிக்கோள், ஆசை இரண்டும் வெவ்வேறானவை. நாம் எதற்காகவும் ஆசைப்படலாம். அதை அடைய வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் குறிக்கோளோ அடைய முடிந்ததாக இருக்க வேண்டும்.
அதுவும் தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்க வேண்டும். இதை ’கிளியர் அன்ட் ஸ்பெசிபிக்’ என்பர். ’சொந்த வீடு கட்ட ஆசைப்படுகிறேன்’ என்பதற்கும் ’அடுத்த மூன்றாண்டுக்குள் 1200 சதுர அடியில் வீடு கட்டுவேன்’ என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது அல்லவா?
நாம் எல்லோரும் சாதிக்கப் பிறந்தவர்கள். அதற்குரிய எல்லா தகுதிகளும் நமக்கு இருக்கிறது. நமக்குத் தேவை மனதில் உறுதி, செயல்திட்டம், அயராத உழைப்பு.
வாழ்வில் முன்னேற ஏழு அடிகளை எடுத்து வைத்தால் மனம் விழித்துக் கொள்ளும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களால் எப்படி சாதிக்க முடிகிறது என ஆராய்ச்சி செய்தார் ஒருவர். வீரர்களிடம் ஏழு பண்புகள் இருப்பதாக அவர் முடிவு வெளியிட்டார். அவை என்ன தெரியுமா?
என்ன இன்னும் ஒரு ஏழா... இன்னும் ஏழு நாட்கள் காத்திருங்களேன்!