ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள ஊர் மலையப்பப் பாளையம். இங்குள்ள அழகிய மலையை உதயகிரி என்று சொல்வார்கள். இதன் மீது கோயில் கொண்டிருக்கிறார் உதயகிரி முத்துவேலாயுத ஸ்வாமி! சிறந்த வரப்பிரசாதி இந்த முருகன். கோயிலுக்கு வடக்கே சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப் படுவோர், தீர்த்த பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்! அதேபோல், உதயகிரிநாதனுக்குச் செவ்வரளி மாலை சார்த்தி, 108 தீபமேற்றி வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும்; பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும்; கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக்கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவதை தரிசிக்கலாம். இந்த நாளில் முருகனை தரிசிப்பது விசேஷம்!