இன்றைக்கும் பிரமிக்கத்தக்க அளவில் பிரமாண்டமாகத் திகழ்கிறது கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயில். கோயில் விமானத்தின் தென்புறம் தேவ கோஷ்டத்தில் திரு மகளின் சிற்பம், சிற்பியின் அதி அற்புதப் படைப்புக்குச் சான்று! திருமகள், பண்டைய காலத்தில் தாய் தெய்வமாகப் போற்றி வணங்கப்பட்டதாகச் சொல்கின்றன. கல்வெட்டுகள், மலர்ந்த தாமரைப் பூவின்மீது தாயார் அமர்ந்திருக்கிறாள். கருமை சூல்கொண்ட மேகங்கள் மழையைப் பொழியும். அதனால், அங்கே வளமையும் செழுமையும் அதிகரிக்கும். இதைச் சுட்டிக்காட்டுவதற்காக, தாமரைமீது திருமகள் அமர்ந்திருக்க, மேலே உள்ள இரண்டு யானைகளும் நீரைச் சொரியும்படி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. யானைகள், சூல் கொண்ட கருமேகங்களின் குறியீடு, இரண்டு யானைகளின் உடலானது பாதியாகவும், மீதியாக மேகங்களின் தோற்றமும் வடிக்கப் பட்டுள்ள சிற்பத்தைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு நகரவே தோன்றாது, நமக்கு.