பதிவு செய்த நாள்
28
அக்
2019
12:10
அன்னுார்:அன்னுாரை சேர்ந்த இரு இளைஞர்கள், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள புனித தலங்களில் தீர்த்தம் எடுத்து வர, 7,200 கி.மீ., துாரம், 19 நாட்களில் பைக்குகளில் சென்று திரும்பியுள்ளனர்.அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் யுவராஜ், 29. குப்பேபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 24. தனியார் நிறுவன ஊழியர்கள். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சோமையம்பாளையம், அய்யாகோவிலில், திருப்பணி நடக்கிறது.
இதற்காக இமயமலை அடிவாரத்தில் உள்ள, புனிததலங்களிலிருந்து தீர்த்தம் கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் விரும்பினர்.இதையடுத்து இவ்விரு இளைஞர்களும், தலா ஒரு பைக்கில், கடந்த 5ம் தேதி அன்னுாரிலிருந்து புறப்பட்டனர். ஐதராபாத், நாக்பூர், ஜான்சி, டில்லி வழியாக உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள யமுனேத்ரி கோவிலுக்கு ஐந்து நாட்களில் சென்றடைந்தனர். மலை மீது, 4.5 கி.மீ., நடந்து சென்று, அங்கு யமுனை நதியில் தீர்த்தம் எடுத்தனர்.பின்னர், கங்கோத்ரி சென்று, அங்கு கங்கை நதியின் தீர்த்தமும், கேதார்நாத்தில், மந்தாகினி நதி தீர்த்தமும் எடுத்தனர். பத்ரிநாத்தில், சரஸ்வதி நதிதீர்த்தம் எடுத்தனர். அதன்பின் எல்லைப்புற கிராமமான மணாவில் ஒரு நாள் தங்கினர். பைக்குகளில், தேசிய கொடி ஏற்றியபடி, கோவை டூ உத்தரகாண்ட் என்னும் ஆங்கில வாசகத்துடன் பைக்கில் சென்றதால், மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். அன்னுாரிலிருந்து, 19 நாட்களில், 7,200 கி.மீ., துாரம் பைக்கில் பயணம் செய்து, புனித தலங்களின் தீர்த்தம் எடுத்து வந்ததற்கு, ராணுவம், போலீஸ் அதிகாரிகள் பக்தர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அன்னுார் திரும்பிய இருவருக்கும், கஞ்சப்பள்ளி மற்றும் குப்பேபாளையம் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.