உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாட்டுடன் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதியில், கடந்தாண்டை விடவும் நடப்பாண்டில் மழைப்பொழிவு பரவலாக இருந்ததால், மக்கள் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினர்.கடந்த ஒரு வாரமாக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று, தீபாவளியன்று, அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இனிப்புகளை பரிமாறிக்கொண்டும், வாழ்த்துக்களை கூறியும் பண்டிகையை வரவேற்றனர்.அதிகாலையில், குழந்தைகள் தீபாவளி கொண்டாட்டத்தை துவங்கினர். காலை, 6:00 மணி முதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், சக்தி விநாயகர் கோவில், குட்டைத்திடல் விநாயகர் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். மக்கள் வெள்ளத்தில் திளைத்த கடைவீதிகள் நேற்று, வெறிச்சோடி காணப்பட்டன.