பதிவு செய்த நாள்
28
அக்
2019
01:10
தேவர்களின் தந்தை கஷ்யப முனிவருக்கும், அசுரேந்திரன் மகள் மாயைக்கும் இரண்டாம் திருமணம் நடந்தது. சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். சூரபத்மன் தவமிருந்து சிவனின் ஆற்றலைத் தவிர வேறு யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என வரம் பெற்றான். இதனால் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் சிவனைச் சரண் அடைந்தனர். சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பார்வதிதேவி ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைத்து ஆறுமுகமும், பன்னிரு கைகளுமாக ஒரே உருவமாக மாற்றினாள்.
கந்தன் என்ற அந்தக் குழந்தைக்கு தன் சக்தியை ஒன்று திரட்டி செய்த வேல் ஒன்றை பரிசளித்தாள். சக்தி வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காத்தார். இதுவே கந்தசஷ்டி விழா ஆனது.ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாள்பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருப்பர். ஆறாவது நாளில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடக்கும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதம் இருக்க நல்ல பிள்ளைகள் பிறக்கும் என்பது ஐதீகம்.
மும்மூர்த்தி முருகன்: முருகன் சிவனின் அம்சம். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்தவர். சூரனைசம்ஹாரம் செய்து பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். முருகன் மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவர். திருச்செந்துாரில் முருகன் மும்மூர்த்திகளின் அம்சமாக உள்ளார். ஆவணி, மாசி திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் ஏழாம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவனாக காட்சி தருகிறார். மறுநாள் அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.
விரதம் இருப்பது எப்படி?:
* கந்தசஷ்டி நாட்களில் அதிகாலை 4:30- 6:00 மணிக்குள் நீராடவேண்டும். பால், பழம் மற்றும் உடல்நிலை காரணமாக எளிய உணவு சாப்பிடலாம்.
* ஓம் சரவணபவ, ஓம் சரவணபவாயநம, ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஒன்றை நாள் முழுதும் ஜெபிக்க வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களை காலை, மாலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோயில்களில் விளக்கேற்ற வேண்டும்.
* மலைக்கோயில்களை வலம் வரலாம். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.
* விரதம் இருந்தால் புத்திரதோஷம் விலகும், மழலை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புராணங்களில் கந்தசஷ்டி: சூரபத்மன் வதம் மட்டுமின்றி கந்தசஷ்டிக்கு வேறு சில காரணங்களும் மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
* முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக ஐப்பசி மாத அமாவாசையில் யாகம் தொடங்கி ஆறு நாள் நடத்தினர். யாகத்தீயில் இருந்து தினமும் ஒரு வித்து வீதம் ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஒன்றாக்க... முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
* அசுரர்களை எதிர்க்கும் வல்லமையை பெறவும், அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையில் இருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழசெய்து தேவர்கள் விரதம் இருந்தனர். முருகன் அருள்புரிந்தார். இதனால் ஐப்பசி அமாவாசையை ஒட்டி கந்தசஷ்டி கொண்டாடப்படுவதாக கந்தபுராணம் சொல்கிறது.
ஞானகுரு முருகன்: அசுரர்களை வதம் செய்யும் முன் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச்சொன்னார் குருபகவான். எனவே திருச்செந்துார் குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது உள்ளார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்துார் முருகனை வணங்கினால் குருவினால் உண்டாகும் பாதிப்பு குறையும். திருச்செந்துார் முருகன் ஞானகுருவாக உள்ளார்.
12 நாள் விழா: கந்தசஷ்டி ஆறு நாள் நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாள் நடத்துவர். திருச்செந்துாரில் முதல் ஆறுநாள் வரை விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாள் கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் சஷ்டி விழா நடக்கும்.
முருகன் சிலை ரகசியம்: இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் கொழும்பில் இருந்து 230 கி.மீ.,ல் உள்ளது. இங்குள்ள முருகன் பெயர் கதிரேசன். கருவறையில் எந்த வடிவில் முருகன் இருக்கிறார் என்பது ரகசியம். சன்னதி கதவில் தொங்கவிடப்பட்டுள்ள திரையில் மயில் மீது வள்ளி, தேவசேனாவுடன் அமர்ந்து இருக்கும் முருகனின் உருவம் இருக்கும். இதைப்போன்று வேறு திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். திரைக்கே பூஜை நடத்தப்படுகிறது. ஆடிஅமாவாசையில் ஆரம்பித்து பவுர்ணமியில் முடியும் விழா பிரபலமானது.
விழாவின் போது யானை மீது முருகனுக்குரிய யந்திரம் அடங்கிய பெட்டி எடுத்து வரப்படும். இதை முருகனாக வழிபடுகின்றனர். இக்கோயிலின் பின்புறம் இருக்கும் அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர்.
ஒரு நாள் திறக்கும் வாசல்: திருச்செந்துாரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். ஆனாலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.