பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
11:04
சபரிமலை: சித்திரை விஷூ உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏப்.,14ம் தேதி அதிகாலை விஷூ கனி உற்சவம் கோவிலில் நடைபெறும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், சித்திரை விஷூ உற்சவத்திற்காக கோவில் நடை 10ம் தேதி மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறந்தார். அன்றைய தினம் வேறு பூஜைகள் இல்லை. கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. மேலும், சிறப்பு பூஜைகளாக புஷ்பாபிஷேகம், படி பூஜை போன்றவை துவங்கி, வரும் 18ம் தேதி வரை நடைபெறும். (13ம் தேதி) அதிகாலை சித்திரை விஷூ கனி உற்சவம் நடைபெறும். மண்டல, மகர ஜோதி உற்சவங்களுக்கு அடுத்து அதிகளவு பக்தர்கள் வரும் உற்சவமாக இது திகழ்வதால், பம்பை, சபரிமலை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மூன்று இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் வழியாகவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முதல் வரும், 18ம் தேதி பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படும். திருவனந்தபுரம், எருமேலி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு கேரள மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.சிறப்பு பூஜை, விஷூ உற்சவம் ஆகியவை முடிந்து வரும், 18ம் தேதி இரவு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.