பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
11:04
ஈரோடு: ஈரோடு, நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நாளை நடக்கும் சித்திரை திருவிழாவுக்காக, 16 மூட்டை கம்பு அரைத்து, கம்பஞ்சோறு பிரசாதம் தயாராகி வருகிறது. ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில், சாவடிபாளையம் புதூர் அருகே, காங்கேயம்பாளையத்தில், காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மஹத்தி தோஷம் விலக, மணலையே சிவலிங்கமாக செய்த அகத்தியர், தனது ருத்ராட்ச மாலையை சாற்றி வழிபாடும், தவமும் செய்தார். சித்திரை முதல் நாள் தவம் நிறைவு பெற்று, லிங்கத்தை விசர்ஜனம் செய்யும் பொருட்டு, சாற்றிய ருத்ராட்ச மாலையை எடுக்க முற்பட்டார். அப்போது சிவபெருமான், "உனது ஹத்தி தோஷம் நீங்குவதற்காக மட்டும் எழுந்தருளவில்லை. இன்னாளில் இங்கு வந்து என்னை வழிபடும் அனைவரது தோஷங்களையும் நீக்கிட இங்கு அமர்ந்தோம் என, அசரிரீ வாக்காக கூறினார். சிவ வாக்கை சிரமேற்கொண்டு அகத்தியர் பல அரும் பணிகளை செய்ய தெற்கே சென்றார். தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் சித்திரை முதல் நாள், சித்திரை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 10ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் லட்சார்ச்சனை துவக்கப்பட்டது. இன்று மாலை, 5.10 மணிக்கு மேல் இரவு, 7.20 மணிக்குள் லட்சார்ச்சனை நிறைவு ஹோமம் நடக்கிறது. நாளை அதிகாலை, 4.20 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, புண்யாகம், சங்கல்பம், 108 சங்குஸ்தபானம், ஸ்ரீருத்ர பாராயண ஹோமம் நடக்கிறது. காலை 6 மணிக்கு நட்டாற்றீஸ்வரருக்கு, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. ஸ்வாமிக்கு நைவேத்தியமாக கம்பஞ்சோறு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்காக, 16 மூட்டை கம்பு அரைத்து கம்பஞ்சோறு காய்ச்சும் பணி நடந்து வருகிறது. இதற்கென புதிதாக தயாரான, 110 மண் பானைகளில் கம்பஞ்சோறு வைக்கப்பட்டு, பக்தர்கள் தரும், 5,000 லிட்டர் தயிர், மாங்காய் கலந்து, கம்பஞ்சோறு வழங்கப்பட உள்ளது. கோவில் தர்மகர்த்தா சந்திரசேகர், செயலாளர் காந்தி மற்றும் நிர்வாகிகள் கூறுகையில்,சித்திரை திருவிழா அன்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். அனைவருக்கும் காலை, 6 மணியில் இருந்து மாலை, 5 மணி வரை கம்பஞ்சோறு பிரசாதம் வழங்கப்படும், என்றனர்.