“மத சுதந்திரம் என்பது என்ன? கொத்துக் கொத்தாக மக்களை மதம் மாற்றுகிறார்களே.. .நியாயமா? மதமாற்றம் பற்றி மகாசுவாமிகளின் கருத்து என்ன?” என அன்பர் ஒருவர் கேட்டார். சுவாமிகள் பேசத் தொடங்கினார். “மத சுதந்திரம் என்பது எந்த மதத்தை வேண்டுமானாலும், அவரவர் விருப்பப்படி பின்பற்றும் உரிமை.
ஆனால் நடைமுறையில் மதமாற்றம் எப்படி நிகழ்கிறது? மதத்தொடர்பே இல்லாத உபாயங்களால் நிகழ்கிறது.
இந்த உபாயம் இரண்டு வகையானவை. ஒன்று பலவந்தம். மிரட்டி உருட்டி கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது. ஒரு மதத்தினரின் ஆட்சி நடக்கும் போது மற்ற மதத்தினருக்கு வரி விதிப்பது இந்த உபாயத்தைச் சேர்ந்தது.
இரண்டாவது வசிய உபாயம். கல்வி அளிப்பது, பிணி தீர்ப்பது போன்றவற்றை மத நிறுவனங்கள் மூலம் செய்யும் போது உதவி பெறுவோருக்கு உதவி அளிப்போரிடம் கடப்பாடு உண்டாகி விடும். அதை நேர்முகமாகவோ, சாதுரியமாகவோ எடுத்துக் காட்டி மதமாற்றம் செய்கிறார்கள்.
இவை எல்லாம் விடக் கேவலமானது லஞ்சமாகப் பொருள் கொடுத்தே ஒரு மதத்தினரை வேறு மதத்திற்கு மாற்றுவது. பாவம் மக்கள் இதில் சிக்கி விடுகிறார்கள்.
லஞ்சம், வசியம் இரண்டும் பிற மதங்களை வெறுக்கச் செய்யும் பொய்ப் பிரசாரத்தை விடவும், தவறான வஞ்சகச் செயல்பாடுகள். எனவே லஞ்சத்தாலும், வசியத்தாலும் மத மாற்றம் செய்வது என்பது சட்டபூர்வமாக குற்றமாகக் கருதப்பட வேண்டும். இவர்களுக்குக் கடும் தண்டனை தர வேண்டும்.
சுய விருப்பம் இல்லாமல் மதமாற்றக் குற்றங்கள் நடைபெறும் போது, அவற்றுக்கு எதிர் நடவடிக்கையாகத் தாய் மதத்திற்கே மீண்டும் திரும்புவதைக் குற்றமாகக் கருதாமல் அரசு அனுமதிக்க வேண்டும்.
தாய் மொழி, தாய் மதம், தாய் நாடு போன்றவற்றில் அதிகப் பற்றோடு இருப்பது தான் இயல்பு. அந்த இயல்பை வளர்த்துக் கொண்டால் மதமாற்றம் என்பது அடிபட்டு விடும்” என்றார்.
மகாசுவாமிகளின் விளக்கத்தால் தெளிவு பெற்ற அன்பர் வணங்கி விடை பெற்றார். - திருப்பூர் கிருஷ்ணன்