பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
11:04
அழகர்கோவில்: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மே 6ல், மதுரை வைகை ஆற்றில், காலை 5.45 மணிக்கு அழகர் எழுந்தருளுகிறார். இதற்காக, மே 4ல் அழகர் மலையில் இருந்து புறப்படுகிறார். வைகை ஆற்றில் எழுந்தருள, சுந்தரராஜ பெருமாள், மே 4ல், மாலை 6 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளழகர் வேடமிட்டு, மதுரைக்குப் புறப்படுகிறார். மே 5, காலை 6 மணிக்கு, மூன்று மாவடியில் எதிர் சேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு புதூரிலும், மாலை 6 மணிக்கு அவுட்போஸ்ட்டிலும் எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மே 6ல், காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின், காலை 11 மணிக்கு ராமராயர் மண்டபம் சென்றடைகிறார். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது. மாலையில் அங்கிருந்து புறப்பட்டு, இரவு 12 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு செல்கிறார். மே 7 காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி, வண்டியூர் வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மே 8 காலை மோகனி அவதாரத்தில் எழுந்தருளி, இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் புறப்பட்டு, மே 10ல் அழகர்கோவிலை சென்றடைகிறார். மறுநாள் உற்சவசாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.