சிவகாசி : சிவகாசி மாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனி பொங்கல் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. தினம் அம்மன் சர்வ அலங்காரத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்தார். வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாள்விழாவில் அரிசி கொட்டகையில் அம்மன் எழுந்தருள ,அன்று சிவகாசி மற்றும் கிராம பகுதியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அக்னி சட்டி, முடி காணிக்கை, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை என ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க, தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர் எழுந்தருளிய சிறிய தேர் ரதவீதிகளில் வலம் வர, பெரிய தேருக்கு சிறப்பு பூஜை செய்த கோயில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.