அனைத்து ஆன்மாக்கள் தினமான இன்று (நவ.2) கல்லறைத் திருநாள் கடைபிடிக்கப்படுகிறது. நல்லவர், தீயவர் என்ற பாகுபாடு இன்றி மறைந்தவர்களை நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதே கல்லறைத் திருநாள்.
இயேசு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து 40 நாட்கள் மக்களுக்கு காட்சி அளித்து பின் வானுலகை அடைந்தார். அவரைப் போலவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் உயிர்த்தெழுவதாக கருதப்படுகிறது. மண்ணிலிருந்து ஆதாமைப் படைத்த ஆண்டவர், அவனது விலா எலும்பில் இருந்து ஏவாளைப் படைத்தார். பின் அவர்களைப் பார்த்து, ‘மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் மீண்டும் மண்ணுக்கே திரும்புவீர்கள்’ என்றார். மேலும், ‘நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றும் மரிக்காமல் இருப்பான்’ என்றார். இதன் அடிப்படையில் தான் கிறிஸ்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இந்நாளில் கல்லறைகளைப் பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவர். இதற்கு முன்னதாக நேற்று (நவ.1) சகல பரிசுத்தவான்கள் தினம் என்ற பெயரில் துறவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.