பதிவு செய்த நாள்
03
நவ
2019
12:11
தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோவில் அகழியும், கோட்டைச் சுவரும், 180 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டு, 904 கோடி ரூபாய் மதிப்பில், 12 விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ரூ180 கோடி மதிப்பில், உலக புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழி மற்றும் கோட்டை சுவரை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பெரிய கோவிலைச் சுற்றி, 4.25 கி.மீ.,க்கு உள்ள அகழியை சுத்தப்படுத்தி, இரு புறமும் நடைபாதை, படித்துறைகள் போன்றவை அமைக்கப் படுகின்றன. மேலும், படகு வசதியும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நடைபாதை ஓரத்தில், கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், கலாசார மையம், பெரிய கோவில் பற்றிய விளக்கக் கூடம் போன்றவையும் அமைக்கப்படுகின்றன.மேலும், பெரிய கோவிலைச் சுற்றி உள்ள பெரிய கோட்டைச்சுவர், 35 அடி உயரமும், 15 அடி அகலமும் உடையது. இந்த சுவர், பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதே போல், உட்பகுதியில் உள்ள, சிறிய கோட்டைச்சுவரும் சேதமடைந்து உள்ளது.கி.பி., 1003 - 1006ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட, இரண்டு கோட்டைச் சுவர்களும், பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்கப்படுகின்றன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பெரிய கோவிலை சுற்றி பணிகள் மேற்கொள்ள, தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டு, மாநகராட்சி விண்ணப்பித்து உள்ளது.