பழநி :பழநி முருகன் கோயிலில் அக்.,28ல் காப்புக்கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் அதிகாலை 4:00மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பகல் 1:30மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. பின் சின்னக்குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் பராசக்திவேல் வாங்கியதும் 3:30மணிக்கு சன்னதி நடைசாத்தப்பட்டது.
பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வெள்ளி மயில்வாகனத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் கிரிவீதியில் எழுந்தருளினார்.நான்கு சூரன்கள் வதம்திருஆவினன்குடி கோயிலில் வேலுக்கு பூஜை செய்து சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் கிரிவீதியில் வடக்கே தாரகாசூரன், கிழக்கே பானுகோபன்சூரன், தெற்கே சிங்கமுகாசூரன், மேற்கே சூரபத்மன் ஆகியோரை வேல் எய்து வதம் செய்தார். பின்னர் இரவில் சுவாமி மலைக்கோயில் சென்றதும் அர்த்தஜாம பூஜை நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், இணை ஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி, ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (நவ.,3ல்) காலை 11:30 மணிக்கு மலைக்கோயிலில் சண்முகர் வள்ளி, தெய்வானைக்கும், இரவு 7:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.