கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு வரும் 11ல் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2019 11:11
பெரம்பலுார்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், வரும் 11ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக் கோவில் உலக பிரசித்தி பெற்றது. புரதான சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுக கிணறு. ஒரே கல்லிலான நவக்கிரகம் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் உலக அளவில் வியக்கக்கூடியதில் ஒன்றாக, கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும் பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பவுர்ணமி அன்று அரிசியால் சாதம் சமைத்து காலை 9 மணி முதல் கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி மாலை 6 மணி அளவில் தீபாரதனை நடைபெறும். லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி அன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கோவிலில் படைக்கப்படும் அன்னாபிஷேகம் பக்தர்களுக்கு பிரசாதமாக இரவு 9 மணி அளவில் வழங்கப்படும். மீதமுள்ள சாதம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மட நிர்வாகிகள் தலைமையில் அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர். இதில், கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை விழாக்குழுவினர் செய்து என்றனர்.