’மனமே விழித்தெழு’ என்கிறோமே... ஏன் ’உடலே விழித்தெழு’ எனச் சொல்லவில்லை? மனம் என ஒன்று இல்லாவிட்டால் ’அது’ என்று தானே நாம் அழைக்கப்படுவோம்? எனவே தான் மனதை நோக்கி, ’விழித்தெழு’ என்கிறோம். போற்றுவதும் தூற்றுவதும் உடலுக்குத் தான். ஒருவரை நாம் உடலால் தோல்வியடையச் செய்யலாம். ஆனால் மனம் விழித்தெழுந்தால் மீண்டும் முயற்சி செய்து வெற்றியை எட்டுவது சாத்தியமே.
வறுமையில் வாடிய ஒருவர் அகில இந்திய வானொலியில் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். நேர்காணலில் அவரது குரல் வளமாக இல்லை என புறக்கணித்தனர். மற்றொரு நிறுவனம் அவரை ’நெட்டையானவர்’ எனச் சொல்லி மறுத்தது. அதன் பின் மும்பை நகரத் தெருக்களில் அவர் தங்கியிருந்தார். அடுத்த சில ஆண்டுகள் அவர் பட்ட கஷ்டத்திற்கு எல்லை இல்லை. ஆனால் அவர் மனம் விழிப்புடன் இருந்தது.
அந்த நபர் யார் தெரியுமா? நடிகர் அமிதாப் பச்சன்!
சரி. அவரது மனதோடு உடலும் ஒத்துழைத்தது. வாழ்வில் வெற்றி பெற்றார். உடலில் குறை ஏதும் இருந்தால்? ஐம்புலன்களும் ஒருவருக்கு ஒத்துழைக்காவிட்டால்?
”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின் கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது”என்கிறார் அவ்வையார். ஒருவேளை உடல் குறையுடன் பிறந்தால், ’நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்’ ’முடவன் கொம்புக்குத் தேனுக்கு ஆசைப்படலாமா?’ என சிலருக்கு எண்ணம் வரலாம். ஆனால் அது தேவையில்லை. இதோ சிலரது வாழ்வை திருப்பிப் பாருங்கள்.
இந்த பட்டியலில் முதலில் வருபவர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங். உலகப்புகழ் விஞ்ஞானி. இவர் எழுதிய ’அ ஆணூடிஞுஞூ ஏடிண்tணிணூதூ ணிஞூ கூடிட்ஞு’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் உலகெங்கும் காத்திருந்தனர். சமீப காலத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகராக இவரை ஒப்பிட்டு பேசும் அளவுக்கு உயர்ந்தார். ஆனால் இவரது 21ம் வயதில் நரம்பு சம்பந்தமான நோயால் துன்பப்பட்டார். பேச முடியாமல் போனது. 50 ஆண்டுகள் நடக்க முடியாமல் முடங்கினாலும், தன் பேராசிரியர் பணியைச் செவ்வனே செய்தார். நிலவில் புவியீர்ப்பு சக்தி இல்லாமல் வாழ்வு எப்படி இருக்கும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் பங்கேற்றார். 76ம் வயதில் 2018 மார்ச்சில் இயற்கை எய்தினார். அதுவரை உடல் நிலையோ, மன நிலையோ ஒருபோதும் இவரைக் கட்டுப்படுத்தியதில்லை!
அடுத்து நாம் சிந்திக்க வேண்டியவர் சுதா சந்திரன். 16ம் வயதில் காலில் இவருக்கு அடிபட்ட போது, சாதாரண காயம் எனக் கருதிய மருத்துவர்கள் மருந்திட்டு கட்டினர். அது செப்டிக் ஆனதால் காலை இழக்க நேர்ந்தது. ஆனால் சுதாசந்திரன் மனதில் சாதிக்கும் வெறி எழுந்தது. செயற்கைக் காலைப் பொருத்தி பரத நாட்டியம் கற்று சிறந்த நாட்டிய தாரகையாக விளங்கினார். உலகம் எங்கும் புகழ் பரவியது. அவரது வாழ்க்கை நம்மை ஊக்குவிக்கும் கலங்கரை விளக்கம். ஏனெனில் அவரது மனம் மட்டும் விழிப்புடன் இருந்தது. அடுத்து கொண்டாட வேண்டியவர்
எச்.ராமகிருஷ்ணன். தொலைக்காட்சியில் இவர் செய்தி வாசிப்பதை அனைவரும் ரசிப்பர். இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்கும் சக்தியை இழந்தார். ஆனாலும் 50 ஆண்டுக்கும் மேலாக பத்திரிகை உலகில் சேவை செய்கிறார்.
அடுத்தவர் பத்மபூஷன் டாக்டர் சுரேஷ் அத்வானி. புற்று நோய் மருத்துவரான இவரின் எட்டு வயதில் போலியோவால் நடக்க முடியவில்லை. ஆனால் குறிக்கோளை அடைய உடல்குறை தடையாக இல்லை. அயராத உழைப்பால் ’ஸ்டெம் செல்’ துறையில் சாதித்தார். இந்தியாவின் முதல் ’போன் மேரோ டிரான்ஸ்பிளாட்டேஷன்’ (ஆணிணஞு Mச்ணூணூணிதீ கூணூச்ணண்ணீடூச்ணtச்tடிணிண) என்ற சாதனையை நிகழ்த்தினார். இவரது சேவையைப் பாராட்டி 2002ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2012 ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதையும் அளித்து அரசு கவுரவித்தது.
’போனிபேஸ் பிரபு’ (ஆணிணடிஞூச்ஞிஞு கணூச்ஞத) வுக்கு இரண்டு கால்களும் உணர்வு அற்றிருந்தன. எப்போதுமே சக்கர நாற்காலி தான். அதில் உட்கார்ந்து கொண்டே டென்னிஸ் விளையாடக் கற்றார். உலகளவில் மாற்றுத்திறனாளிக்கான டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்றார். 1998ல் இவர் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
ஒருமுறை வீரப்பெண்ணான அருனிமா சின்ஹாவை திருடர்கள் ரயிலிலிருந்து வெளியே தள்ளினர். இதனால் கால்கள் செயல் இழந்தன. வாழ்வில் சாதிக்க வேண்டும் என ஒரு வெறி. என்ன செய்தார் தெரியுமா? அயராத பயிற்சியால் 2011 ல் எவரெஸ்ட் சிகரத்தின் மீதேறினார். கால்கள் இல்லாமல் எவரெஸ்ட்டில் கால் பதித்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். அப்படியும் வெறியடங்கவில்லை. ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ, ஐரோப்பாவின் எல்பிரஸ், ஆஸ்திரேலியாவின் கோசியஸ்கோ (ஓணிண்ஞிடிதண்த்டுணி) சிகரங்களில் தன் செயற்கைக் காலைப் பதித்து சாதனை படைத்தார்!
இப்போது சொல்லுங்கள். முன்னேற்றத் தடையாக இருப்பது உடலா, மனமா? வாழ்வில் பிரச்னைகள் இருக்கலாம். முயற்சியில் தடை குறுக்கிடலாம். ஆனால் மனம் விழித்திருந்தால் தடைக்கல் எல்லாம் படிக்கல்லாக தோன்றும். அந்த சக்தி நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வருகிறது....
’எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்து விடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்!’
ஒரு நாள் வாழ்க்கைப் பயணம் முடிந்து விடும். அதற்கு முன் நாம் யார், நம் ஆற்றல் என்ன, எதிர்நோக்கியுள்ள வாய்ப்பு, பிரச்னை என்னென்ன, குறிக்கோளை அடைய என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என நம்மை கேட்க வேண்டும். அதற்கு மனம் விழித்திருக்க வேண்டும். வாய்ப்புகள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அதை உணர்ந்தால் மயக்கம் தெளிந்து விடும். எங்கேயோ படித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன....
’ஒவ்வொரு நாளும் காட்டில் ஒரு மான் காலையில் விழித்துக் கொள்ளும். அந்த மானுக்குத் தெரியும் வேகமாக ஓடும் புலியை விட, வேகமாக ஓடாவிட்டால் இறப்போம் என்று; ஒவ்வொரு நாளும் அதே காட்டில் ஒரு புலி விழித்துக் கொள்ளும்.
அதற்கும் தெரியும் வேகமாக ஓடும் மானை விட வேகமாக ஓடாவிட்டால் பட்டினியால் இறப்போம் என்று.
எனவே நீ மானோ, புலியோ யாராக இருந்தாலும் பொழுது விடிந்தால் ஓடிக் கொண்டே இரு’
இதை மீண்டும் மீண்டும் படியுங்கள். மனமும் விழித்துக் கொள்ளும் அந்த புலியைப் போல, அந்த மானைப் போல!